புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் கலந்து கொண்டபோது, அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப முழுமையான அறிவு, திறமை மற்றும் சிந்தனையுடன் கூடிய மாணவரை உருவாக்குவதே இந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.

பாரம்பரிய கற்றல் முறைக்கு பதிலாக, மாணவர்களுக்கு அழுத்தமில்லாத கற்றல் சூழலை வழங்கி, அவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களுக்கு ஏற்ப துறைகளைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும் வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் விளக்கமளித்தார்.

மேலும், இந்த முயற்சி தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அதிகாரிகளுக்குப் போதுமான விளக்கம் இல்லையென கல்வித் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டார். சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் முன் விரிவான கலந்துரையாடல்கள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.