சபாநாயகர்–சபை முதல்வரின் செயற்பாடுகள் சபை கெளரவத்துக்கு பேராபத்து – தயாசிறி எம்.பி.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தின் கெளரவத்தையும் மரியாதையையும் மலினப்படுத்தியுள்ளனர். இவர்களின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகத்தை தெரிவு செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை 2024.10.13 மற்றும் 14 ஆம் திகதியன்று விண்ணப்பம் கோரியிருந்தது. அரசியலமைப்பு பேரவைக்கு கிடைத்த விண்ணப்பங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க மற்றும் இரேஷா சுபாசினி சிறிவர்தன ஆகிய மூவரின் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்களுக்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளில் வடமத்திய மாகாண தற்போதைய ஆளுநர் வசந்த ஜினதாச (மேல்நீதிமன்ற நீதிபதி (ஓய்வுநிலை), சப்ரகமுவ மாகாண தற்போதைய ஆளுநர் சம்பா ஜானகி(மேல் நீதிமன்ற நீதிபதி (ஓய்வுநிலை) ஆகியோரின் பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை விரிவாக ஆராய்ந்து கேள்வியெழுப்பியுள்ளது.

இலஞ்சம், ஊழல் பற்றிய ஆணைக்குழு சுயாதீனமானது. இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் அரசியல் நியமனமாக ஆளுநர்கள் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளமை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2024.09.27ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கான பரிந்துரைக் கடிதம் மாகாண ஆளுநர்களின் உத்தியோகபூர்வ விடயதான கடிதத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இது அரசியல் நியமனத்துடனான பரிந்துரை.

இந்த விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் 2025.01.03ஆம் திகதியன்று அரசியலமைப்பு பேரவை முதலாம் இலக்கமுடைய மாதவ தென்னக்கோன், இரண்டாம் இலக்கமுடைய ரங்க திசாநாயக்க, மூன்றாம் இலக்கமுடைய சுபாசினி சிறிவர்தன ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

2025.01.07ஆம் திகதியன்று அரசியலமைப்பு பேரவை கூடி இவ்விடயம் குறித்து கலந்துரையாடியபோது, அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான பிமல் ரத்நாயக்க இந்த ஆளுநர்கள் மேல்நீதிமன்ற நீதிபதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னரே இந்தப் பரிந்துரைகளில் கைச்சாத்திட்டுள்ளார்கள். ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் இந்தப் பரிந்துரைகளை வழங்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றின் மீது நம்பிக்கை கொண்டு அரசியலமைப்புப் பேரவையின் சிவில் உறுப்பினரான தினேசா சிறிவர்தன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்கு தனது வாக்கினை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னரே ரங்க திசாநாயக்கவுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட அரசியலமைப்புப் பேரவையில் சிவில் உறுப்பினரான தினேசா சிறிவர்தன வாக்கெடுப்பு இடம்பெற்ற அன்றைய தினமே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்கு பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயங்கள் பொய் என்பதை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு சத்தியகடதாசி ஊடாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவ்விடயம் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

பாராளுமன்ற தத்துவங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் 02 (ஆ) 04ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றக் குழுக்களை தவறான வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் நோக்கில் போலியான விடயங்கள், தகவல்களை முன்வைப்பது பாரியதொரு குற்றம். சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வேண்டுமென்றே இந்தத் தவறை இழைத்துள்ளார். சபாநாயகரும் அந்தத் தவறை இழைத்துள்ளார்.

இதனால் நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தின் கெளரவம் மற்றும் மரியாதையை சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் ஆகிய இருவரும் மலினப்படுத்தியுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன. ஆகவே இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.