அரசாங்கத்தின் மோசடிச் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
தனது வெளிப்படுத்தல்களுக்கான முயற்சிகளை எந்தவொரு அச்சுறுத்தலாலும் தடுத்து நிறுத்தி வைக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, நான் அவருக்கெதிராக ஊடகங்களுக்கு முன்னால் கருத்துத் தெரிவித்தால் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் 118ஆவது உறுப்புரையின் கீழ் ஆணைக்குழுவுக்கு செய்த அவதூறாக கருதி சட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இருக்கிறார் என்பதற்காக ஊழல் எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் எந்தவொரு அனுபவமும் இல்லை என்பதே அந்த அறிவிப்பில் தெளிவாக தெரிந்தது. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிராக அல்லது அதன் கெளரவத்தை பாதிக்கும் வகையில் அவதூறு ஏற்படுத்தினால் உயர் நீதிமன்றத்துக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக தண்டனை பெற்றுக்கொள்ளும் விதத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று 118ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும், பணிப்பாளர் நாயகம் பதவி என்பது உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு சமமானதல்ல. நீதிமன்ற பதிவாளருக்கு சமமானதாகும். பதிவாளருக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படுத்தப்படும் அவதூறை உயர்நீதிமன்றத்தின் அவதூறாக கருதி செயற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
அச்சுறுத்தல் விடுத்து என்னை அமைதியாக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். என்னை சிறையில் அடைத்தாலும், ஊழலின் விளைவாகவே நீங்கள் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டீர்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு செய்யவேண்டிய சகல விடயங்களையும் நான் செய்து முடிப்பேன் என்பதை ரங்க திசாநாயக்கவுக்கு நேரடியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் அதிக அனுபவம் கொண்ட 15 வருடங்கள் சட்டத்தரணியாகக் கடமையாற்றிய நபரொருவரே பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார். இருந்தபோதும் இந்தச் சட்டத்தை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும்போதும் சட்ட வரைவுத் திணைக்களம் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் என்று மொழிபெயர்த்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்ற இணையத்தளத்தில் பணிப்பாளர் நாயகம் ஒருவரின் வெற்றிடம் தொடர்பில் அறிவித்தலை வெளியிடும்போது அதிலும் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பில் அனுபவம் கொண்ட 15 வருடகால சட்டத்தரணியாக அனுபவம்பெற்ற சட்டத்தரணியொருவரையே கோரியிருந்தார்கள். ஆனால் ரங்க திசாநாயக்க இந்தப் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
இருந்தபோதும், அவருக்கு குற்றவியல் வழக்குத் தாக்கல் தொடர்பில் ஒரு நாள் அனுபவம் கூட இல்லை. அடிப்படை தகுதியில்லாமல் ஒருவர் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், யாராவது ஒருவர் அவருக்கு பதவியை பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதியை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கான நேர்முகப் பரீட்சையின்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவரான மாதவ தென்னக்கோன் என்பவரே அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஒருபுறம், அவர் குற்றவியல் வழக்குத் தாக்கல் தொடர்பில் 27 வருடகால அனுபவம்கொண்ட அதிகாரியாவார். இரண்டாவதாக, மேல்நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். பேராசிரியர் தினேஷா சமரரத்ன இருவர் தொடர்பிலும் இரு பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். ரங்க திசாநாயக்கவை பரிந்துரைத்த இருவரும் ஆளுநர்கள். எனவே, அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் பதவிக்கு வந்த இவர் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவாரா?.
தற்போது ரங்க திசாநாயக்கவை பாதுகாக்க சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தலையீடு செய்து வருகிறார். ரங்க திசாநாயக்கவை பதவிக்கு பரிந்துரை செய்ததன் பின்னரே அவர்கள் இருவரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி பதவியேற்று 48 மணிநேரத்தில் ஆளுநர்களை தெரிவு செய்திருக்கிறார். ஆனால், சரியான தகவலின் அடிப்படையில் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பெயரொன்றை பரிந்துரை செய்ய அரசியலமைப்புச் சபைக்கு வாய்ப்பை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி இந்தக் கடிதத்தை கவனத்திற்கொள்ளாமல் ரங்க திசாநாயக்கவை பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தெரிவு செய்திருக்கிறார்’’ என்றார்.
