வசீம் தாஜூதீன் படுகொலை – புதிய தகவல் விரைவில் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

“ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதின் கொலைச் சம்பவத்துக்க உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிவும் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே தேவைப்படும் முழுமையான தகவல்கள் விரைவில் கிடைக்கும்” என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், 

“இலங்கையின் விளையாட்டுத் துறையைப் பற்றி பேசும்போது ரக்பி வீரர் வசீம் தாஜூதீனை தவிர்த்து அதனை பேச முடியாதுள்ளது. எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடாது சிறந்த திறமையான பல விருதுகளை வென்ற ஒரு வீரராவார். எனினும், அவர் துரதிர்ஷ்டவமாக உயிரிழந்துள்ளார்.

அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறிப்பிடத்தக்க சந்தேகம் நிலவுகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தீவரமாக அதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அந்த மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. 

கஜ்ஜா என்ற போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சி.சி.ரி.வி. விசாரணைகளில் அவர் அந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனுடன் தொடர்ச்சியாக மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகி இந்தோஷேியாவிலிருந்து கைது செய்யப்பட்ட ஒருவர் அதற்கான ஆயுதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவருகின்றன. 

அதேபோன்று செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதீன் கொலைக்கு உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கின்றன. 

அந்த வகையில் வெகு விரைவில் தேவைப்படும் தகவல்கள் முழுமையாக கிடைத்து விசாரணைகளை நிறைவு செய்ய முடியும்” என்றார்.