2025இல் இலங்கையின் பொருளாதார மட்டத்தில் வளர்ச்சி – உலக வங்கி

இலங்கை 2025ஆம் ஆண்டில் பொருளாதார மட்டத்தில் பலமான வளர்ச்சியை அடையுமென உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

பொருளாதாரத்தில் நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வியூகமிக்க மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார ஆய்வாளர் ரிச்சர்ட் வோல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று(07) இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘‘இந்த விடயத்தில் நாங்கள் பிரதானமாக மூன்று பிரிவுகள் குறித்து கவனம் செலுத்துகிறோம். முதலாவது போட்டித் தன்மையை அதிகரிப்பதாகும். தனியார் துறை உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் குறிப்பாக பொருளாதாரத்தை மேலும் விரிவாக்க வேண்டும். அதன்போது சுங்க வரி உள்ளிட்ட அதிலிருக்கும் தடைகளை நீக்க வேண்டிவரும். ஏதாவதொரு மட்டத்தில் இலங்கை தீர்வை வரியினூடாக வருமானத்தை உழைத்தாலும் சந்தை மற்றும் ஏற்றுமதித் துறையை கவனத்திற்கொண்டால் ஒரு விதத்தில் தொகை மீறிச் செல்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

சுங்க நிர்வாகக் கட்டமைப்பு, கொள்ளளவு, செயற்பாடுகள் வர்த்தகத்துக்கு முக்கியமான தளமாக அமைய வேண்டும் என்பதுடன் சிறந்த வருமானம் உழைக்கும் வழியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஒழுங்குமுறை பொறிமுறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். பொருளாதார ஆணைக்குழுவொன்றை அமைப்பதனூடாக இலங்கையின் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மேம்பாட்டுக்கும் அதற்கு அவசியமான சேவைகளுக்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தனியார் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் விதத்தையும் தேடிப்பார்க்க வேண்டும்.

இறுதியாக நாட்டின் இடவசதியை முகாமைத்துவம் செய்வது அவசியமாகும். இலங்கையின் நிலப்பரப்பில் 80 சதவீதம் அரசுக்கு சொந்தமானது என்பதால் அவசியத்துக்கு அப்பால் செயற்படும் நிலைமை இருக்கிறது என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. காணிகளை எந்த நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்பதில் ஒரு தெளிவில்லாத நிலைமை நிலவுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சிக்கலுக்குரிய விடயமாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கும் அவர்களின் உழைப்புத் திறனை அதிகரித்துக்கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் நிலப்பரப்பை நிலைபேருத்தன்மை கொண்டதாக பயன்படுத்துதல் முகாமைத்துவம் செய்வது முக்கியமான விடயமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் பொருளாதார ஆய்வாளர் சுருதி லக்தாகியா,

‘‘இலங்கையின் எதிர்கால முன்னெடுப்புகள் சாதகமாக அமைந்துள்ளன. 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் பலமான வளர்ச்சி ஏற்படுமென்று எதிர்வு கூறுகிறோம். 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இதில் ஓரளவு அதிகரிப்பை அவதானிக்க முடியுமாக இருக்கும். இருந்தபோதும், வியூகமிக்க மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அதனை மீண்டும் தீர்மானிக்க முடியும்.

வெளி நிதி நிலைமைகள் அதில் தாக்கம் செலுத்தும். வியாபாரப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தீர்வை வரியினால் பாதிப்பு ஏற்பட்டாலும் சுற்றுலாத்துறை ஈர்ப்பினூடாக அதனை அதிகரித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் வருடங்களில் மொத்த தேசிய உற்பத்தியையும் விட 2.3 சதவீதத்துக்கும் அதிகமான உயர் மதிப்பை பொருளாதாரம் அடையும்’’ என்றார்