மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார்.
2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும் எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய், அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார்.
நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும் அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள்.
